யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பெண் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
மேற்படி சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியா நெடுங்குளத்தினைச் சேர்ந்தவர். அவர் புத்திசுவாதீனமற்றவர். இந்நிலையில் அவர் யாழ்.அரியாலைப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இடம்பெயர்விற்குப் பின்னர் சென்று தங்கியிருந்தார்.
சிறிது காலத்தின் பின்னர் அவர் அங்கிருந்து யாழ்.கன்னியர் மடப் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். அங்கிருந்து கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை காணாமல் போனதாக, மறுநாள் 4 ம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் அரியாலையில் உள்ள அவருடைய உறவினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் நாச்சிமார் கோவிலடியில் சடலமாக மீட்கப்பட்டார்.





