வவுனியாவில் நாளை ஹர்த்தாலா?

903

வவுனியாவில் நாளை ஹர்த்தாலா?

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக நாளை திங்கட்கிழமை வடமாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றினை நடத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீர்மானித்துள்ளனர். இது குறித்து தமது ஆதரவை வழங்குவது தொடர்பில் வவுனியா வர்த்தக அமைப்புக்கள் குழப்பமடைந்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு இதுவரை இலங்கை அரசாங்கத்தினால் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.

தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்களாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசின் செயற்பாட்டை கண்டித்தும், சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத் தர வலியுறுத்தக் கோரியும் வடமாகாண ரீதியில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விட்டுள்ள நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றினையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அந்த வலிகளை உணர்ந்தும், அவர்களது கோரிக்கைகளை ஏற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும், பல்கலைக்கழக சமூகமும் பூரண ஹர்த்தாலுக்கும், அவர்களது போராட்டத்திற்கும் ஆதரவினை வழங்கி அதனை வலுப்படுத்தி வரும் நிலையில் வவுனியா மாவட்ட வர்த்தக நிலையங்களுடன் தொடர்புடைய இரு அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கை வர்த்தகர்கள், மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கம், வடபகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நீண்ட போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை காலை கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குகின்றது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் இடம்பெறுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது அவ்வாறு தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் நாம் போராட்டத்திற்கு ஆதரவு எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கயில், எதிர்வரும் 25 ம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்பாட்டபேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், அன்றையநாள் முழுவதும் வடமாகாணம் தழுவிய ஆதரவினை கேட்டிருந்த நிலையிலே வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இப் போரட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்துள்ளது.

இவ் அமைப்பின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெறுமா எனக் கேட்ட போது, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு எனத்தெரிவித்து ஹர்த்தால் தொடர்பில் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இவ்வாறு பொறுப்பு வாய்ந்த வர்த்தக அமைப்புக்களுடன் தொடர்புடைய குறித்த பொது அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையானது வவுனியாவில் ஹர்த்தாலா, இல்லையா என்ற குழப்பத்தை வர்த்தகர்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.