15 மணி நேரம் ஊரடங்கு தளர்வு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் அளவு குறைந்த அளவில் காணப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (09.04.2020) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள் , வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் நடமாட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலய மைதானத்தினுள் நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு , மன்னார் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்கான 3 பேரூந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளுக்கு பேருந்து சேவையில் ஈடுபடாததன் காரணமாக பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் காத்திருந்தமையினை காணக்கூடியதாகவிருந்தது.

வவுனியா நகரில் கடந்த ஊடரங்கு காலப்பகுதியில் விதிக்கப்பட்ட வீதித்தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் பாதுகாப்பு மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.





