வவுனியாவில் முச்சக்கர வண்டியை திருடிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

1684

முச்சக்கர வண்டி..

வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (12.10) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக வாடகை ஓட்டத்திற்காக தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை நேற்று முன்தினம் மாலை (11.10) நபரொருவர் எடுத்துச் செல்வதை அவதானித்த பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி, முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு குறித்த முச்சக்கர வண்டியை ஒருவர் எடுத்துச் செல்வதை தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, அதன் உரிமையாளரும், அருகில் நின்றோரும் குறித்த நபரை விரட்டிச் சென்று வவுனியா நீதிமன்றத்திற்கு அண்மித்ததாக மடக்கிப் பிடித்ததுடன், வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் மடக்கிப் பிடித்த குறித்த நபரை ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.