வவுனியா மாநகர முதல்வர், பிரதி முதல்வருக்கு எதிரான வழக்கு : தீர்ப்பு ஜூன் 19ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

110

வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் பதவிகளை வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, அடுத்த மாதம் (ஜூன்) 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் (19.05.2026) இந்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால் தீர்ப்பு வழங்குவது எதிர்வரும் 19.06.2026 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவானது சட்டத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரின் தெரிவுகள் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ளன மற்றும் பிரதி முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ப.கார்த்தீபன், வவுனியா மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் என்பதால் அவர் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். இதனடிப்படையில், இவ்விருவரும் தத்தமது பதவிகளை வகிப்பது செல்லுபடியற்றது என அறிவிக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன் மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.