குடிகாரர்களை திருத்த இப்படியும் ஒரு ஐடியா!!

394

Drink

முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர்.

இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல செயல்படுகிறது. இங்கு மதுப்பழக்கம் முற்றி விடமுடியாமல் உடலும் மனமும் கெட்ட குடிகாரர்களுக்கு வைன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மணி நேர இடைவெளியில் அளவான வைன் கோப்பையில் ஊற்றிக்கொடுக்கிறார்கள். இதற்கு நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் (Managed alcohol program) என்றும் பெயரிட்டுள்ளனர்.

இப்படி அளவாக மதுவை கொடுப்பதன் நோக்கம். மதுவுக்கு நன்றாக பழகிவிட்ட உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து அதன் வழியிலே சென்று, பிறகு, முற்றிலும் பழக்கத்தை நிறுத்திவிடுவதுதானாம்.

ஒட்டாவா நகரின் மேற்கே தியான மையம்போல அமைதியான நிலையில் காணப்படுகிறது இந்த ஹோட்டல். அதன் வரவேற்பு அறையில் பாம்புகள் ஒழுங்காகவும் வரிசையாகவும் விடப்பட்டு காட்சியளிக்கின்றன. இது கூட நோயாளிகளுக்கு மனரீதியாக ஏற்படுத்தும் ஒரு நம்பிக்கையாக தெரிகிறது.

இங்கு வருகிற பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர வயதுடையவர்கள் அல்லது வயதானவர்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களும் வருகின்றனர். தடி ஊன்றியவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவர்கள், நடக்க தள்ளாடுபவர், காயம்பட்டவர்கள், கைகால் வீக்கமடைந்தவர்கள், கடித்து குதறப்பட்ட தழும்புடையவர்கள், விரல்களில் நகங்கள் கழன்றவர்கள் என சாராயத்தால் பலவிதங்களில் சீரழிந்தவர்களாக வருகிறார்கள்.

Drink1

அவர்களுக்கு, இங்கு ’கலிபோர்னியன் ஒய்ட்’ என்ற 13% அல்கஹால் கொண்ட மதுவே கொடுக்கப்படுகிறது.

மது ஊற்றும் ஜாடியில் அளவீடுகள் உள்ளன. முதல்முறையாக, காலை 7.30 மணிக்கு, கொடுக்கும் அளவு 200 மி.லி. பிறகு, இரவு 9.30 மணி வரை மணிக்கு 140 மி.லி. வீதம் கொடுக்கப்படுகிறது. இந்த முறையில்தான் இங்கு சிகிச்சை நடக்கிறது.

ஒரு ஜாடியில் உள்ள மது, 50 பேருக்கு கொடுத்து காலி செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான அளவில் மது பீப்பாய்கள் மொத்தமாக வாங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊழியரின் கருத்து, இந்த ஓக்ஸ் ஹோட்டலில் முன்னணி ஊழியராக பணியாற்றும் லூசியா அலி கூறும்போது,’ இங்கு போதை நிலையில் வருபவர்களை சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்வதில்லை.

அப்படியும் சிலர் வருவதுண்டு. சிகிச்சை பெறுபவர்களில் அளவான மதுவிலும் போதையேறியதாக அறிந்தால் அறையில் சென்று தூங்க சொல்கிறோம்.

மது நோயாளிகளுக்கு மதுவால் இங்கு சிகிச்சை அளிக்கும் செய்தி பற்றி பிபிசி உலக சேவை வானொலியிலும் லிண்டா ப்ரெஸ்லி அறிக்கையில் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்கு முன்பு

இந்த நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வீடற்ற பாதிக்கப்பட்டவர்களின் குடிமுயற்சியை நிறுத்த, ஒரு சுகாதார நிபுணர்கள் குழுவினரின் சிந்தனையில் உருவானதுதான். ஆனால், அது பல சங்கடங்களால் தோல்வியடைந்தது என்கின்றனர்.

மருத்துவரின் கருத்து

இதன் ஆரம்ப கண்டுபிடிப்பாளரும் ஒட்டாவா மருத்துவமனையின் ஊழியர்களின் தலைவருமான டாக்டர் ஜெஃப் டர்ன்புல் இதுபற்றி கூறும்போது, ‘குடிப்பழக்கத்தால் சீரழிந்து விட்டவர்களை அப்படியே விட்டுவிடாமல், அவர்களை தேற்றும் ஒரு முயற்சிதான் இது, இப்படி கொஞ்சகொஞ்சமாக குறைத்து நிறுத்த முடியும் ஆனால், அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்’ என்று கூறுகிறார்.

மது நோயாளிகள் கருத்து

வடக்கு கனடாவில் உள்ள இனூய்ட் என்ற ஊரில் இருந்து வந்திருக்கும் எலிசா என்ற மது நோயாளி கூறும்போது, ”எனது 53 வயதில் 40 ஆண்டுகள் குடிகாரனாக கழித்தேன். போதை போதாமல் ஒரு நிலையில் மவுத்வாஷ், ஹேர் ஸ்ப்ரே என சுவை பிடிக்காமலே போதை வேண்டி குடித்தேன். நான் மது அடிமையாக இருப்பதை வெறுத்தேன் பெரிய நோயாளியாக உணர்ந்தேன். அதனால் இங்கு வந்தேன்.

இங்கு அருந்தும் அளவு மிகக்குறைவு ஒரு நிதானத்தை உணர்கிறேன் இனி வேறு எதையும் குடிக்க மாட்டேன்” என்கிறார். கோரின்னே என்ற பெண் அவருடை துணைவருடன் ஓக்ஸில் தங்கியுள்ளார்.

18 ஆண்டுகள் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, பிறகு நிர்வகிக்கப்பட்ட மது திட்டத்தில் சேர்ந்து இருந்து, அதை விட்டு வந்தும் மதுப்பழக்கத்தை விடவில்லை என்கிறார்.

ஆனாலும், அங்கு இருந்தது நல்ல அனுபவம் என்பவர், மதுக்குடித்தால் கடந்த கால சம்பவங்கள் எதையும் நினைவுப்படுத்தாதீர்கள் அதுவே ஒரு நிம்மதிதான் என்கிறார்.

நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுக்கவில்லை.

மதுவில் ஊறிப்போனவர்களுக்குதான் அளவாக கொடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. குறைவாக கொடுத்தாலும் ஒரு மணி இடைவெளியில் கொடுப்பது கூட அதிகம்தான்.

இதனால், அப்பழக்கத்தை நிறுத்தும் பயன் உண்டோ, இல்லையோ ஒரு குடியில் ஊறிப்போனவன் போக்குக்கு ஒரு ஆரோக்கியமான பரீட்சைதான்.