காணாமல் போன 2 கல்லூரி மாணவிகள் எலும்புக் கூடாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

343

Body

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் அங்குள்ள கண்மாய்ப் பகுதியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயம் செய்து வரும் அவருக்கு புஷ்பா, அல்லி ராணி என 2 மனைவிகள் உள்ளனர்.

இதில் முதல் மனைவி புஷ்பா இறந்து விட்டார். அவரின் மகள்கள் சசிகலா, சுதா, லதா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

2வது மனைவிக்கு தங்கம் என்ற மகனும் பொன்னி, ஜெயப்பிரியா என்ற மகள்களும் உள்ளனர். பொன்னி மற்றும் அவரது சகோதரி ஜெயப்பிரியா இருவரும் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி இவர்கள் சகோதரி சுதாவை போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தாங்கள் பூச்சி மருந்து குடித்து விட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவரது தந்தை கருப்பையா பல இடங்களில் தேடியும் பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவை காணவில்லை.

இதனையடுத்து அவர் தன் மகள்களை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வந்தவாசி அருகே உள்ள முத்துப்பட்டிணம் கண்மாய் பகுதியில் 2 எலும்புக் கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்க்கச் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், பெண்கள் அணியும் காலணிகள், உடைகள் ஆகியவை கிடப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு கிடந்த உடைகள் மற்றும் காலணிகள் தனது மகளுடையது தான் என தந்தை கருப்பையாவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பொலிசார் எலும்புக் கூடுகளை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்தது என்ன என்பது பற்றி அறிய பொலிசார் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் 2 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.