கிளிநொச்சிக்கான ரயில் சேவையின் முன்னோட்டம்!!

566

train

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் செல்லும் ரயில் பாதையில் வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி முதல் ரயில் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு முன்னோடியாக வியாழனன்று ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிக்கு பரீட்சார்த்த ரயில் சேவை நடைபெற்றது. இந்த பரீட்சார்த்த ரயில் பயணத்தை இலங்கையின் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன, இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி உள்ளிட்ட இலங்கை இந்திய உயரதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டார்கள்.

தற்போது கொழும்பில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன.ஓமந்தையில் இருந்து 63 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சிக்கு 23 வருடங்களின் பின்னர் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடபகுதியில் ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணம் செய்யத்தக்க வகையில் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதாக இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் காரணமாக வவுனியாவில் இருந்து வடக்கே யாழ்ப்பாணம் வழியாக காங்கேசன்துறை வலையிலான ரயில் பாதையும், மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில்பாதையும் முற்றாக சேதமடைந்தன.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இலங்கை இந்திய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் வடபகுதிக்கான ரயில் பாதைகளை மறுசீரமைக்கும் பணிகளை இர்கோன் இன்டர்னேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பில் இருந்து மதவாச்சி ஊடாக மடுறோட் வரையில் தற்போது ரயில் சேவை நடைபெறுகின்றது. மடுறோட்டில் இருந்து தலைமன்னார் வரையில் ரயில் சேவையை நீடிப்பதற்கான ரயில் பாதை நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன