சிரியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை!!

390

us

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டினால் சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் – அல் – ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின.

ஆனால் ஆசாத் மறுத்து விட்டதால் கிளர்ச்சியாளர்களுக்கு இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன. இதனால் சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

சிரியா நாட்டுக்கு ரஷ்யா சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன. இதனால் சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா ராணுவம் கடந்த 21ம் திகதி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

ரசாயன குண்டு வீச்சில் நச்சு புகை பரவி 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை ஐ.நா பார்வையாளர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது ராணுவ தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல் 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது என அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ரஷ்யாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது என ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து சிரியா மீது 72 மணி நேர தாக்குதலை நடத்த அமெரிக்க தலைமையகமான பெண்டகன் திட்டமிட்டு உள்ளது.

சிரியா மீதான தாக்குதலால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக ரஷ்யா பன்னாட்டு அணுசக்தி முகமையக கூட்டத்தில் நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிடுகையில் சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை. அதை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும் என்றார்.

சிரியாவின் உள்நாட்டு சண்டையில் இந்திய முஸ்லிம்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவுக்கான சிரியா தூதர் ரியாத் அபாஸ் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ரியாத் அபாசை நேற்று அழைத்து, அவருக்கு கண்டன நோட்டீஸ் அளித்தது.

அப்போது அபாஸ் குறிப்பிடுகையில் நான் இந்திய ஜிகாத்துகளை பற்றி குறிப்பிடவில்லை. துருக்கியிலிருந்து வந்த ஜிகாத்துகளை பற்றி தான் சொன்னேன். சிரியாவுக்கு, இந்தியா நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது என்றார்.