இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்த மாட்டோம் : ஒபாமா!!

336

obama

சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஆனால் இதற்கு உள்நாட்டில் எதிர்கட்சி தரப்பிலும் ரஷ்யா மற்றும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து ஒபாமா கூறுகையில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா நாட்டை ஐயத்துடனும் அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனித்து வருகிறோம்.

சிரியாவிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை பன்னாட்டு சமூகத்திடம் ஒப்படைக்க சிரியா அரசை வலியுறுத்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம்.

இதற்கு சிரியா ஜனாதிபதி உறுதியளிப்பாரேயானால், அந்நாட்டின் மீதான தாக்குதல் திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்படும். இந்த முடிவு எனது தேசிய நலனை பொறுத்தே அமையும். சண்டையில்லாமலே இந்த பிரச்சினை முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அமெரிக்க மக்களிடம் நேரிடையாக பேசிய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.