உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!!

351


தண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்….இவ்வாறான விபத்துச் செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவந்தபடியே இருக்கின்றன. ‘


செல்பி’ படமெடுத்த வேளையில் சம்பவித்த இரண்டு மரணங்கள் பற்றிய செய்திகள் கடந்த ஒரு வார காலத்தில் வெளிவந்திருந்தன. இவ்விரு சம்பவங்களிலும் பலியானவர்கள் இளவயதினராவர். இவ்வாறான அநியாய மரணங்களுக்கு கையடக்கத் தொலைபேசியே காரணமாக அமைந்திருக்கின்றது.

தகவல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச கண்டுபிடிப்பாக இன்று ‘ஸ்மாட்ஃபோன்’ திகழ்கின்றது. ஸ்மாட்ஃபோன்களின் வருகையினால் சாதாரண கைத்தொலைபேசிகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன.இப்போதெல்லாம் ஸ்மாட்ஃபோன்கள் வைத்திருக்காதோரைக் காண்பது அபூர்வம். உலகத்தையே சுருட்டியெடுத்து உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறது ஸ்மாட்ஃபோன். அதனால் உண்டாகின்ற அனுகூலங்களை இங்கு கூற வேண்டிய அவசியமில்லை.

இன்றைய இயந்திர வாழ்க்கையில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் ஏராளமான பயன்களைத் தருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஸ்மாட்ஃபோன்களால் நாளாந்தம் மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.


தொலைபேசியில் யாருடனாவது உரையாடியபடியோ இல்லையேல் ‘வாற்ஸ்அப்’ அல்லது ‘வைபர்’ மூலம் தகவல் பரிமாறியபடியோ ரயில் தண்டவாளத்திலும், வீதியிலும் நடந்து சென்ற பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்.

ஓடுகின்ற ரயிலின் அருகில் நின்றபடி ஷெல்பி எடுத்தல், கடலலைக்கு முன்பாக கம்பீரமாக நின்று ஷெல்பி எடுத்தல் போன்ற வேளைகளிலெல்லாம் உயிரிழந்த இளைஞர், யுவதிகள் ஏராளம்.


இது குறித்து ஊடகங்கள் அடிக்கடி எச்சரிக்கின்றன. அரசாங்க மற்றும் சமூகநல அமைப்புகளும் புத்திமதி கூறுகின்றன. ஆனாலும் அநியாய மரணங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் அளவுக்கு கைத்தொலைபேசி மோகம் எமது இளவயதினரை மாத்திரமன்றி பெரியவர்கள் பலரையும் ஆட்கொண்டு விட்டதென்பது நன்றாகவே தெரிகின்றது.

பித்துப் பிடித்தவரைப் போல நாள் முழுவதும் கைத்தொலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கும் பலரை அலுவலகங்கள், வீதிகள், பொது இடங்கள் போன்றவற்றில் அடிக்கடி நாம் காண்கிறோம்.

இவர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையானவர்கள் என்பது மட்டுமன்றி, ஒருவித மனநோய்க்கு உள்ளானவர்களென மனநல வைத்தியர்கள் கூறுகின்றனர். அளவு கடந்த ஈடுபாட்டினால் நாளடைவில் ‘மேனியா’ என்ற நிலைமைக்கு ஆளாக வேண்டிய பரிதாபம் ஏற்பட்டு விடுகின்றது.

நாம் தற்காலத்தில் பயன்படுத்துகின்ற நவீன தொடர்பு சாதனங்கள் அத்தனையையும் முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் மேற்கு நாட்டவர் ஆவர்.

மேற்கின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஜப்பான், சீனா, வியட்நாம், கொரியா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா போன்ற கைத்தொழில் வல்லமை நாடுகள் தொடர்பு சாதனங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இச்சாதனங்களின் இன்றைய பயன்பாட்டினால் பெருமைப்பட வேண்டியது மேற்குலகம் ஆகும்.

ஆனால் கைத்தொலைபேசியினால் உயிரை மாய்த்துக் கொள்ளும்படியாகவோ, பித்துப் பிடித்துப் போகும்படியாகவோ மேற்கு நாட்டவர்கள் மாறி விடவில்லை. அவர்கள் கைத்தொலைபேசியை தேவை கருதி பயன்படுத்தும் பக்குவ நிலையிலேயே உள்ளனர். எனவே அங்கெல்லாம் கைத்தொலைபேசி மரணங்கள் அரிது.

இலங்கை போன்ற நாடுகளில்தான் இந்த விபரீதம் எல்லை கடந்து விட்டது. கைத்தொலைபேசி மோகத்தினால் உயிரையே மாய்த்துக் கொள்கின்றார்களென்றால் இந்த மடைமையை என்னவென்று கூறுவது.

உலக சந்தை இன்று அகலத் திறந்தபடி காணப்படுகிறது. அனைத்து இறக்குமதிப் பொருட்களும் தாராளமாகவே நாட்டுக்குள் வந்து சேருகின்றன. ஸ்மாட்ஃபோன் கைத்தொலைபேசிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்தபடியே செல்கிறது.

நவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போட்டி போட்டபடி உற்பத்தியில் இறங்கியிருக்கின்றன. போட்டி வர்த்தகமானது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழியமைப்பது ஒருபுறமிருக்க, நவீன சாதனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாகவே ஸ்மாட்ஃபோன் போன்ற சாதனங்கள் அனைவரின் கைகளிலும் தாராளமாகவே புரளுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘ஸ்மாட்ஃபோன்’ வைத்திருக்கத் தவறுவது, அகௌரவம் நிறைந்ததென எண்ணும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது.

கைத்தொலைபேசியினால் உண்டாகின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் ஆபத்துகள் அதிகரித்தபடி செல்வதனால் இவ்விடயத்தை இனிமேலும் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

கைத்தொலைபேசிப் பாவனை குறித்து நன்மைகளையும் தீமைகளையும் புரிய வைப்பதில் ஊடகங்கள் நிறையவே பங்காற்ற வேண்டியிருக்கின்றது.

அதேசமயம் சமூக ஆர்வலர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை பாடசாலை மட்டத்திலிருந்து எடுத்துரைப்பது சிறந்ததென அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள்.

அக்கருத்தும் கவனத்தில் எடுக்கப்படுவது முக்கியம்.விஞ்ஞானத்தின் விந்தையினால் மனிதன் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்ற பெருமைக்கு அப்பால், உயிரையே இழந்து கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கின்றது.

அறிவுக் கூர்மை நிறைந்த நவீன சாதனங்களால் மனித அறிவு மழுங்கிப் போவதற்கு இடமளிக்கலாகாது.