வவுனியா மாவட்டத்திலுள்ள 22 தனியார் மருந்தகங்களில் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் பலவற்றில் மருந்தாளர்கள் பிரசன்னமாகியிருக்காமை அவதானிக்கப்பட்டதாகவும் பெரும்பாலான மருந்தகங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் இதுவரை பதிவுகள் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் தகுதி வாய்ந்த மருந்தாளர்கள் இல்லாது மருந்தகங்கள் இயங்கி வருவதாகவும் மருந்துச் சிட்டைகளின்றி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறான குறைபாடுகளுடன் இயங்கி வரும் மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரனின் பணிப்பின் பேரில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எச்.எல்.எம்.அஸ்லம், உணவு மருந்த பரிசோதகர் ந.சஞ்சீவ், பிராந்திய மருந்தாளர் ந.மகேந்திரன் ஆகியோர் வவுனியாவிலுள்ள மருந்தகங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.