அடிக்கடி இருளில் முழ்கும் வவுனியா நகரம் : மக்கள் விசனம்!!

547


power

வவுனியா நகரப் பகுதியில் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பலரும் பாதிக்கப்படுவதாக  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



நகரின் பல இடங்களுக்கு குழாய் மூலமே நீர் விநியோகிக்கப்படுகிறது. மின்சாரம் தடைப்படுவதனால் நீரை விநியோகிப்பதற்கான மோட்டரை எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அன்றாட தோவைகளை பூர்த்தி செய்ய முடியாது மக்கள் அல்லல்படுகின்றனர்.

இது தவிர நவராத்திரி பூசை காலங்களும் திருவிழாக்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற போது முன்னறிவித்தல் இன்றி ஆலயப் பகுதிக்கான மின்சாரத்தினை நிறுத்துவதனால் ஆலய வழிபாடுகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் நகரப் பகுதியில் உள்ள அரச திணைக்களங்களும் மின்தடையால் செயல் இழப்பதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் தொழிற்நுட்ப பாடங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மாணவர்களின் இலத்திரனியலுடன் கூடிய தொழில் நுட்ப கற்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.



மேலும் கணனி கற்கை நிலையங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள், வங்கி நடவடிக்கைகள் எனப் பல நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிப்படைகின்றன.


இது தொடர்பில் வவுனியா, மின்சார திணைக்களத்தின் வாடிக்கையாளர் பிரிவுடன் தொடர்பு கொண்டு கேட்டால் திருத்த வேலைகள் நடைபெறுகின்றது, முடிந்ததும் மின்சாரம் வரும் என்றும் பதில்களையே திரும்பத் திரும்ப அவர்கள் கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் சீராக வழங்கும் போது திருத்த வேலைகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. அதேபோல் திடீர் என ஏற்படுகின்ற திருத்த வேலைகளுக்கு முன்னறிவித்தல் செய்ய முடியாது என்பதும் உண்மையே.


ஆனால் திட்டமிட்ட ரீதியில் மின்சார சபையால் ஒவ்வொரு பகுதிக்குமான மின்சார வேலைகள் இடம்பெற்று வருவதால் அதனை முன் கூட்டியே தெரியப்படுத்தினால் அதனால் எதிர்நோக்கப்படும் அசௌகரியங்கள் குறைக்கப்பட்டு மக்களது இயல்பு வாழ்கையில் பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.