புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்..!

588

smokingபுகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
புகை பிடிப்பதால் உயிருக்கு ஆபத்து, உடல் நலக்குறைவு எற்படும், ஆயுள் குறையும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் புகை பிடிப்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் புகை பழக்கத்தை கைவிடுகிறார்கள்.

புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் சாக்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினார்கள். புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட 2 லட்சம் பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டனர். 4 ஆண்டுகளாக இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சராசரியாக 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என தெரிய வந்தது. அடர்த்தியான புகையிலையை விட சக்தி குறைந்த புகையிலையால்தான் பாதிப்பு அதிகம். நுரையீரலை அதிகம் பாதிக்க செய்கிறது என்றும் தெரியவந்தது.

இதுபற்றி சாக்ஸ் ஆய்வக பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், புகை மற்றும் புகையிலை பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என்று கண்டுபிடித்து உள்ளோம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த ஆதாரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்த கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை 1945–ம் ஆண்டுகளில் ஆண்கள் அதிக அளவில் புகை பழக்கத்துக்கு ஆளானார்கள். 1978–ம் ஆண்டுகளில் பெண்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் பரவியது. அவுஸ்திரேலியாவில் இறப்பு விகிதத்தில் புகை பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் பேர் என்றும் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் தெரிவித்தார்.