100 ரூபாய்க்கு பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்!!

247

ஹொரணை பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளை கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.

100 ரூபாய் கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5,000 ரூபாய் தாள்கள் 60 கிடைத்துள்ளன. அதாவது 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 300,000 ரூபாய் பணம் இருந்துள்ளது.

ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.கருணாரத்ன என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. எனினும் குறித்த நபர் தனக்கு கிடைத்த பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

அண்மையில் ஹொரணை நகர் பகுதியில் பழைய பத்திரிகைகளை சேகரிக்கும் போது அப்பகுதியில் வந்த பெண்ணொருவர் 10 கிலோ கிராம் பழைய பத்திரிகைகளை 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட பத்திரிகைகளை தரம் பிரித்த போது, அதற்குள் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 5000 தாள்கள் 60 காணப்பட்டுள்ளன.

குறித்த பணத்தின் உரிமையாளர் பணத்தை காணாமல் தேடியதுடன், தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் வினவிய போது, அவர் நடந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பின்னர் கருணாரத்னவிடம் சென்று விற்பனை செய்யப்பட்ட பழைய பத்திரிகைகளில் வீட்டின் காணி உறுதிப் பத்திரமும் பணமும் இருந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தாம் கொள்வனவு செய்த பழைய பத்திரிகைக்குள் காணி உறுதிப் பத்திரம் காணப்படவில்லை என்றும் 3 இலட்சம் ரூபா பணம் மாத்திரமே இருந்ததாகக் கூறியதுடன், பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை கருணாரத்னவிற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.