இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன தாயார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தாலவாடியைச் சோ்ந்தவா் சாந்தம்மா (70). சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் கடந்த 2015ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிற்கே திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம், பக்கம் முழுவதிலும் தேடியுள்ளனர். கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொலிசாரும் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சமீபத்தில் கேரளா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்பட்டது.
அந்த கிறிஸ்துமஸ் தின விழாவில் காணமல் போனதாக கூறப்பட்ட சாந்தம்மா இருந்துள்ளார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனடியாக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் தற்போதைய முகவரியை கேட்டு வாங்கியுள்ளனர்.
அதன் பின் அங்கு சென்ற அவர்களை சாந்தம்மா நேரில் பார்த்த போது, அவரை அறியாமலே கட்டித் தழுவி முத்தமிட்டு அன்பை பறிமாறிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அத்துடன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.






