ஆண்களின் மிகப்பெரிய பிரச்சினையான வழுக்கைக்கு புதிய தீர்வு..!

405

baldஆண்களின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக வழுக்கை பார்க்கப்படுகிறது. உலகில் இதனை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.

தலைப்பாகை தொடங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள்.

வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை தரவில்லை என்றே கூறவேண்டும்.

ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஐரோப்பாவில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக் கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.

மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.

ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் அவர்.