பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களுக்கு வவுனியா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு..!

385

நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வடமாகாண சுகாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களை வவுனியா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நேற்று முன்தினம் (23) வரவேற்று நிகழ்வு ஒன்றினை செய்திருந்தனர்.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள தாய்சேய் பராமரிப்பு நிலையத்தில் இருந்து பான்ட்வாத்திய அணிவகுப்புடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, மன்னார் வீதியில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது, வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவிக்கப்பட்டதுடன், அவருக்கு அவரது செயற்பாடுகளை சிறப்பாக செய்ய தமது ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும் தாதியர் கல்லூரி மாணவர்களும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளும், நோயாளர் தொடர்பான பிரச்சனைகளும், உத்தியோகத்தர் தொடர்பான பிரச்சனைகளும் காணப்படுகிறது. தாங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதேசங்களில் உள்ள வளங்களை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்களை வழங்க வேண்டும் எனவும் எமது மாவட்டத்திலும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் இருப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில், தாய்சேய் நலன் வைத்திய அதிகாரி தா.ஜெயதரன், தொற்றா நோய் வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன், வவுனியா நகரசபைச் செயலாளர் கா.சத்தியசீலன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1

2

3

4

5