இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

303

odiஇந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் ஆட்டம் கேரள மாநிலம், கொச்சியில் இன்று வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்த டெஸ்ட் தொடர், சச்சினின் கடைசி டெஸ்ட் தொடராகும். சச்சினின் கடைசி தொடருக்காக பலம் குறைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், இதனை சச்சினும் மற்ற வீரர்களும் மறுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி சர்வதேசத் தரத்திலான அணி என்றும் அவர்கள் கூறினர்.

இந்தக் குற்றச்சாட்டை பொய்யாக்கும் நோக்கத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள்தொடரில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடக் கூடிய வீரர்கள் இல்லாததுவே அந்த அணியின் இன்னிங்ஸ் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

ஆனால், 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் போட்டியில் அந்த அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவர். இது, இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

20 ஓவர் உலக சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அணித்தலைவரும் மேற்கூறப்பட்ட கருத்தையே பதிவு செய்துள்ளார்.

போலார்ட் இல்லாமல் விளையாடுவது மேற்கிந்தியத் தீவுகளுக்கு பின்னடைவே. இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் சிறந்த துடுப்பாட்டவீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

ஆனால், பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமான பந்து வீச்சு மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இல்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் தொடக்க ஜோடியான தவன்-ரோஹித், மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.

கடந்த தொடர்களில் சோபிக்காத ரெய்னா, யுவராஜ் ஆகியோர் இத்தொடரில் கனிசமான ரன்களை அடிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சைப் பொறுத்தவரை முகமது சமி சிறந்த ஃபார்மில் உள்ளார். அவருக்கு பக்கபலமாக புவனேஸ்வர் குமார், மொஹித் சர்மா மற்றும் குல்கர்னி செயல்படுவர்.