300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

420

 

பதறவைக்கும் வீடியோ

தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாகலேறி வட்டம் ஏரிக்கரைப் பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று நடமாடியதை, அந்த பகுதி வழியே சென்ற மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை இவர்கள் ஓடுவதைக் கண்டு, அவர்களை நோக்கி விரட்டி தாக்கியது.

இதனால் சித்தனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்கவுண்டர் பாரதி (45) மற்றும் அவரின் சித்தப்பா மகள் அலமேலு (42) மற்றும் சந்தோஷ் (25) ஆகிய மூவரும் காயமடைந்தனர். சிறுத்தை கிராமபப்பகுதியே சுற்றி வந்ததால், கிராமமக்கள் கற்கள் மற்றும் கட்டைகளை தூக்கி வீசியுள்ளனர்.

ஆனால் சிறுத்தை அருகிலிருந்த கரும்புத் தோட்டத்துக்குள் ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டது. காயமடைந்த பெண் உட்பட மூவரையும் மீட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் துரிதமாக ஈடுபட்டனர்.

பொலிசாரும் உடன் வந்ததால், அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை பதுங்கியுள்ளதை அறிந்த சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரும்புத் தோட்டத்துக்கு முன்பு குவிந்தனர்.

அவர்களை பொலிசார், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பலமுறை அறிவுறுத்தினர். கிராம மக்கள் சிறுத்தை பிடிபடுவதைப் பார்க்க ஆர்வமாக இருந்ததால், அங்கிருந்து செல்லவில்லை. கரும்புத் தோட்டத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து சிறுத்தையைப் பிடிக்க நெருங்கினர். அப்போது, சிறுத்தை கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து குதித்துத் தப்பியது.

கிராம மக்கள் சுற்றியும் திரண்டிருந்ததால், அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்தது. துரத்தித் துரத்தி தாக்கியதில் சிலர் காயமடைந்தனர். கரும்புத் தோட்டத்திலிருந்து தப்பி ஓடிய சிறுத்தை எங்குப் பதுங்கியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.