இறந்துபோன இந்தியர் : நாடு கடந்து வந்து சம்பள நிலுவையை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்!!

396

சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார்.

தந்தை நிறுவனத்தை நடத்திவந்தபோது, இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் பணியாற்றியுள்ளார்.

இந்திய இளைஞர் அவசரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. அப்போது, மிஸ்பர் அல் சமாரியின் தந்தை 6,000 ரியால் (ரூ.1,12,000) இந்திய இளைஞருக்குச் சம்பள பாக்கி வைத்திருந்தார்.

நிறுவனத்தின் நிதிநிலை காரணமாக அந்த இளைஞர் இந்தியா திரும்பியபோது மிஸ்பர் அல் சமாரியின் தந்தையால் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க முடியவில்லை.

உன்னுடைய பணம் எந்த நேரத்திலும் உன்னை வந்து சேரும், நீ கவலைப்படாமல் செல் சென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியா திரும்பிய இளைஞர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தத் தகவல் சவுதி தொழிலதிபருக்குத் தெரியவந்ததும் மனமுடைந்து போனார். உடனடியாக, தன் மகனை அழைத்து இளைஞருக்கு தான் வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை எப்படியாவது கொடுத்து விடுமாறு கூறினார்.

தொடர்ந்து, மகன் மிஸ்பர் அல் சமாரி சவுதி தூதரகம் வழியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு இறந்துபோன இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்தார். பின்னர், 6000 ரியாலுக்கான செக்குடன் இந்தியா வந்த அல் சமாரி இளைஞரின் குடும்பத்தினரிடம் செக்கை வழங்கினார்.

மகன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றியதைக் காண மிஸ்பர் அல் சமாரியின் தந்தை உயிருடன் இல்லை. மிஸ்பர் அல் சமாரி சவுதி திரும்புவதற்கு முன் வயது முதிர்வு காரணமாக அவரின் தந்தையும் இறந்தும் போனார்.