வவுனியாவில் வீட்டில் வைத்து சபை வழிபாடுகள் : மக்கள் கடும் எதிர்ப்பு!!

733

 

மக்கள் கடும் எதிர்ப்பு

வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து மக்களை அழைத்து சபை ஒன்றின் சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு இன்று காலை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சபை சமய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வீதியில் ஏழுற்கு மேற்பட்ட சபை வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விஷேட தினங்களில் சபை வழிபாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்து அருகிலுள்ள மக்களுக்கு சபை சமயவாழிபாடுகளினால் ஏற்படும் சத்தங்களினால் அசௌகரியங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன் அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சபை வழிபாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நிறுத்தி சபைக்குரிய சமய வழிபாட்டுத்தளத்திற்கான பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று சபைக்குரிய கட்டிடங்களை அமைத்து சபைக்குரிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு இடையூறுகள் இன்றி சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதியில் இன்று காலை 9 மணியளயவில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கை குறித்து பகுதியிலுள்ள வீட்டில் சபை வழிபாடுகளை மேற்கொண்ட போதகரிடம் வினவியபோது, எனது வீட்டில் வைத்து கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து சபை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றேன். கடந்த 15வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியிலிருந்து சபை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.மக்களுக்கு பணம் வழங்கி சமய மதமாற்றம் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை.

எனது வீட்டுக்காணியில் சபையை நடாத்தி வருகின்றேன். பிரதேச சபை இதற்குரிய அனுமதியை தரவில்லை. கட்டிட அனுமதியைப் பெற்று சபையை நடாத்துமாறும் அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு பிரதேச சபையினால் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வீட்டிற்கான கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஆலயத்திற்கான வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவில்லை. இதேவேளை அப்பகுதியில் சபையை நடாத்த வேண்டாம் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

சமாதானத்தை சீர்குலைக்கின்ற செயற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வீடு வீடாகச் சென்று எவரையும் சபையில் இணைக்கவில்லை. சிலர் புற்றுநோயினால் வருகின்றார்கள் சுகமடைந்து செல்கின்றார்கள். அவர்கள் திரும்பவும் எமது வழிபாடுகளில் இணைந்து வருகின்றார்கள்.

பிசாசு பிடித்து சுகமானவர்கள் வருகின்றார்கள். நம்பிக்கையில் வருகின்றவர்களை நாங்கள் எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்? எவரையும் நாங்கள் வற்புறுத்துவது கிடையாது கணவனை இழந்த ஐவர் வருகின்றார்கள் அவர்களுக்கு மட்டும் மாதாந்த உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மகாறம்பைக்குளத்தைச்சேர்ந்த 24 குடும்பங்கள் எமது சமய வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். சபைக்கு வருகின்ற அனைவரும் ஒரு கிலோ மீற்றருக்குள்ளிருந்து வருகின்றார்கள். வவுனியாவில் ஏழு இடத்தில் எமது சபை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை முழுவதும் 119 கிளைகள் இயங்கிவருகின்றன. எமது தலைமை அலுவலகம் வெள்ளவத்தையிலுள்ளது. இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இங்குள்ள சிலரும் வெளியிலிருந்து வந்தவர்களுமே.

ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எமது சபை வழிபாட்டு நடவடிக்கைகள் இடம்பெடுகின்றன. எனினும் இன்றைய தினம் இப்பகுதியின் எதிர்ப்பின் காரணமாக எமது சபை சமய வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடதிற்குச் சென்ற பொலிசார் இருபகுதியினருடையேயும் இணக்கத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் எதிர்பினை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.