வவுனியாவில் நான்கு உயிர்களைக் காவுகொண்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவை : பாதுகாப்பு கடவை திறந்து வைப்பு!!

1250

பாதுகாப்பு கடவை திறந்து வைப்பு

ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதப்பாதைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட பாதுகாப்பு கடவை உத்தியோகபூர்வமாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16.09.2018 அன்று வீதியைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றில் பயணித்த 8 பேரில் 4 பேர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்தனர்.

விபத்தில் காரிலிருந்து வெளியே குதித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியிருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு இன்று பாதுகாப்பு கடவை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கத்தினால் ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதப்பாதைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு இரு பக்க கடவைகளும் இன்று காலை 9 மணியளவில்,

புளியங்குளம், ஓமந்தை, கனகராயன்குளம், நெளுக்குளம், பூவரசன்குளம், நெடுங்கேணி ஆகிய 6 பகுதி பொலிஸ் நிலையங்களின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிட்யூ.ஜ.ஆர்.பொன்சேகவினால் உத்தியோகபூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

புகையிரக்கடவையில் உயிரிழந்த 4பேருக்கு அஞ்சலி செலுத்தி மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம அலுவலர், கிராம அமைப்புக்கள் மாதர் அமைப்பு, கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.