வவுனியாவில் முச்சக்கரவண்டியில் உணவு விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

1061

முச்சக்கரவண்டியில் உணவு விற்பனை

வவுனியாவில் முச்சக்கரவண்டியில் பாதுகாப்பற்ற முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கும், வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராக 41,000 ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரமற்றதும் பாதுகாப்பற்றதுமான முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கும், வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் நேற்று பொதுசுகாதாரப் பரிசோதகர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் போது குறித்த நபர்களுக்கு எதிராக 41,000 ரூபாய் நீதிமன்றத்தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் கடதாசிப் பெட்டியிலும், ஆசனத்திலும் உணவுப் பொருட்கள் தூசு படுகின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்தமை, காலாவதியாகும் நிலையிலான பணிஸ் விற்பனை செய்தமை, மருத்துவப் பரிசோதனையற்ற வெதுப்பகம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு நான்கு குற்றச்சாட்டுக்களும், மற்றைய விற்பனையாளருக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், வெதுப்பக உரிமையாளருக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு 41,000 ரூபாய் தண்டப்பணமாக நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் கண்ணாடி பிற்றிங் பயன்படுத்திய பிளாஸ்டிக் வெயிலுக்கு உருகிய நிலையில் பாணுடன் ஒட்டிய நிலையில் விற்பனை செய்தவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.