வவுனியா கல்கமுவ மக்கள் குடிமனைகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு மண் கடத்த முற்பட்டவர்களை விஷேட அதிரடிப்படையின் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ஈரட்டைபெரியகுளம், கல்கமுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (25.02) மாலை 4.30 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹர அவர்களின் தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இச் சுற்றிவளைப்பின் மூலம் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து டிப்பர் வாகனம் மற்றும் மண் அள்ளும் வாகனத்தையும், ஈரட்டையை சேர்ந்த 23,32 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹர தெரிவித்தார்.


















