வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு : பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!!

546

நகரசபையின் பதினொராவது அமர்வு

வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று (26.02) நகரசபையில் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30. மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.

முக்கியமாக நகரப்பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முடியாது. அத்துடன் இரவு ஏழு மணிக்கு முன்பாக அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் தங்கள் சேவையை முடித்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் மாணவர்களின் சுகாதார நலன்கள் குறித்தம் நகரசபை கவனத்தில் எடுத்து அதனை நிவர்த்தி செய்யுமாறு வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதனை மீறும் தனியார் கல்வி நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்தார்.

வவுனியா நகரசபை அமர்வில் வவுனியாவில் மாட்டிறைச்சி விலை 650 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மாட்டிறச்சி 850 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் எஸ்.செந்தில்ரூபன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக நகரசபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

நுண்நிதி நிறுவனங்களால் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் அரசாங்கம் குடும்ப பெண்களுக்கு சலுகையாக வழங்கிய ஒரு இலட்சம் ரூபா பணத்தை வங்கிகள் வழங்க முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டிய நகரசபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி மாவட்ட செயலகம் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.

வவுனியா பிரதான வீதிகளில் போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தை சீர்படுத்தாமல் வாகன பரிசோதனைகளில் ஈடுபடுகின்றனர் இதன் காரணமாக நகர போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கின்றது. பாடசாலை நேரங்களில் கனகரவாகனங்கள் பயணிப்பதை பொலிசார் நிறுத்த வேண்டும். அத்துடன் சிறு பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணிந்து பெற்றோர் கூட்டிச்செல்ல வெண்டும் என நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன் தெரிவித்தார்.