வவுனியாவினை வந்தடைந்த கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்ட பேரணி!!

540

கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்ட பேரணி

தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாப்புலவு பொதுமக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்ளும் நோக்குடன் 2019 மாசி மாதம் 27ம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகனப் பேரணியானது இன்று (01.03.2019) காலை 11.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தது.

காணி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கோப்பாபுலவு மக்கள் , யாழ்ப்பாணம் வலி வடக்கு , மயிலிட்டி , பலாலி மக்களைப் போலவே தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் சிலாவத்துரை மக்களினதும் பல வருடங்களாக சட்டத்தின் மூலம் நீதியை பெற்றுக்கொள்வதற்காக போராடும் பள்ளிமுனை மக்களினதும் காணி உரிமையும் கடற்படையினால் கையகப்படுத்தியுள்ள முள்ளிக்குளம், சம்பூர், பானம, அஸ்ரப் நகர் மக்களின் காணிகளை அம் மக்களுக்கே மீள கையளிக்குமாறு கோரியும் அரசின் மூலம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து இவ் மக்கள் பேரணி இடம்பெறுகின்றது.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், மக்களுடைய காணிகள் இன்று வரை விடுவிக்கபடாமல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஜனாதிபதி கடந்த வருடம் தெரிவித்திருந்தார் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பதாக மக்களுடைய காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்று மூன்று மாதங்கள் கடந்து விட்டன. எனவே அரசாங்கம் எமது காணிகளை விடுவிக்க வேண்டுமென தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 27ம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்த இவ் வாகனப்பேரணியானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஊடாக இன்று வவுனியாவை வந்தடைந்துள்ளமையுடன் நாளையதினம் கொழும்பை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.