வவுனியா பாடசாலையில் தேன்கூடு அச்சம் காரணமாக மாணவர்கள் வெளியேற்றம்!!

801

மாணவர்கள் வெளியேற்றம்

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் தேன் கூடு காரணமாக அதனை அகற்றுவதற்காக இன்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலுள்ள அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் இன்று காணப்பட்ட தேன்கூடு காரணமாக பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புக்கள் காணப்படுவதாக பாடசாலையின் அதிபர் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இன்றைய தினம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கி தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபருக்கு கல்வி வலயப்பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இன்றைய விடுமுறை தினத்தை வேறு ஒரு தினத்தில் பாடசாலை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று காலை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக நடவடிக்கைக்காக அதிபர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது தற்போது தேனீயை அகற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வெளியிலிருந்து உதவி பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதற்குரிய பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலையிலிருந்து தேனீயை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.