வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

453

நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசாங்கம் குடும்ப பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இன்று (08.03.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உலக பெண்கள் தினமான இன்று ‘துன்புறுத்தும் தனியார் நுண்கடன் கம்பனிகளை எதிர்த்து நில்’ என்ற தொனிப்பொருளில் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் பெண்களின் உடல், உள, சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கும் சாராய பார், கள்ளுக் கடைகளை இழுத்து மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், மத்திய வங்கியே இன்னும் உறக்கமா? நுண்நிதிக்கடன் திட்டமா அல்லது இன அழிப்பு திட்டமா? கடன் கொடுத்து குடும்பத்தை குலைக்காதே, கடனே குடும்ப வன்முறைக்கு காரணம், பெண்களின் உடல் வியாபாரப் பொருளா? யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடனா போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், வவுனியா இளைஞர் முன்னணி, பசுமைத்தொழிலாளர் நலன்புரிச் சங்கம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.