இலங்கை ஜனாதிபதியை நேரடியாக தொடர்பு கொண்டு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் : ஜெயலலிதா!!

323

jayalalithaஇலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை ஜனாதிபதிக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் நிலை குறித்தும், இலங்கை கடற்படையினர் செய்து வரும் அட்டூழியம் குறித்தும், உங்களுக்கு பல முறை வலியுறுத்தி கடிதங்களை எழுதியுள்ளேன்.

தமிழக அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்கவும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.

ஆனால், மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌன சாட்சியாகவே இருந்து விட்டதால், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் எல்லை அடங்காமல் போய்விட்டது.

இதற்கு உதாரணமாக கடந்த புதன்கிழமை, 47 படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் 325 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்க முயன்றுள்ளனர். தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுவிடுவதாகவும் ஆயுதம் ஏந்திய இலங்கை கடற்படையினர் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், 15 படகுகளில் சென்ற 110 மீனவர்களை பிடித்துக் கொண்ட இலங்கை கடற்படை, 32 படகுகளில் சென்ற 215 மீனவர்களை திருப்பி அனுப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட 110 தமிழக மீனவர்களும் திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் கடலோர காவல்படை மூலமாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், அதற்குள், 8 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது மிகவும் கண்டிக்கத்தக்க, மிக மோசமான நடவடிக்கையாகும். இது போர் நடவடிக்கையை ஒத்த செயலாகும். இதனால், இந்தியாவின் மரியாதை மிகவும் மோசமாக்கப்படுகிறது. தங்களது வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மத்திய அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையே தமிழக மீனவர்களிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது.

எனவே, இனியும், இதுபோன்ற தொடக் கூடாது என்ற கொள்கையை நாம் தொடர முடியாது. இனியாவது மத்திய அரசு விழித்துக் கொண்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை அதிபருக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு எந்த வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

இலங்க கடற்படையினரின் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நிகழாத வண்ணம் தடுத்து, தமிழக மீனவர்களை காப்பதில் உரிய பணியை செய்திட வேண்டும்.

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினரால் பிடிபட்டுள்ள 22 படகுகளையும், 140 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கவும், ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.