வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுழற்சி முறையில் புதிய உறுப்பினர் நியமனம்!!

993

புதிய உறுப்பினர் நியமனம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுழற்சி முறை அடிப்படையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவரை சுயேட்சைக் குழு-1ல் போட்டியிட்ட வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் நியமித்துள்ளதாக அதன் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் சுயேட்சைக் குழு-1 என மீன் சின்னத்தில் போட்டியிட்டு விகிதாசார அடிப்படையில் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒருவர் என சுழற்சி முறையில் பதவியினை வழங்க வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

அதன் அடிப்படையில் ஒரு வருட பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்த சிவக்கொழுந்து நடராஜா பதவிவிலக, அவரது வெற்றிடத்திற்கு சுயேட்சைக் குழு-1 இல் சாளம்பைக்குளம் தொகுதியில் போட்டியிட்ட சிவபுரம் பகுதியைச் சேர்ந்த மணியம் நாகேந்திரராஜா வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பே தற்போது அகத்தேசிய முற்போக்கு கழகம் என்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.