இந்திய-இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ஜனவரியில் நடைபெறும் என தமிழக மீனவ பிரதிநிதிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்தார்.
தமிழகத்தில் இருந்து கச்சத் தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், படகு, மீன் பிடி வலை போன்றவற்றை சேதப்படுத்துவதும், மீனவர்களை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை அவர்கள் கோரிக்கை மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, விஜயன் ஆகியோருடன் தமிழக மீனவ பிரதிநிதிகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேற்று சந்தித்து, இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித் இந்திய-இலங்கை மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்தார்.




