வவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய திட்டம்!!

526

கொரோனா வைரஸ்..

உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் புதிய திட்டமொன்றை கையாண்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு, வரவேற்பு பிரிவு, பொலிஸ் நிலைய முறைப்பாட்டு பிரிவு, கைதிகள் விசாரணை பிரிவு போன்றவற்றில் பொலிஸார் முன்பாக கண்ணாடிப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்ணாடிப் பெட்டியினுள் பொலிஸார் அமர்ந்திருப்பதுடன் கண்ணாடிப்பெட்டியின் வெளிப்பகுதியில் இருக்கும் பொதுமகனிடம் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே கையை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள்ளே வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.