வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

597

வீதியோர மரங்கள்..

வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோரம் பூத்துக் குலுங்கும் பல மரங்கள் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. மிகுதியாக நீதிமன்ற வளாகத்திற்க்கு முன்னால் உள்ள மரங்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக எந்த ஒரு இடத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்படவும் இல்லை. பஜார் வீதியில் நிழலில் ஒதுங்கி இளைப்பாற ஓரு இடத்தில் கூட மரம் இல்லை. இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நகரசபையினர், சூழலியலாளர்கள் கவனத்திலெடுப்பார்களா?

உண்மையில் மரங்களே நமது நினைவுச் சின்னங்களாகும். அவை உயிருள்ள சின்னங்கள். நம்மை உயிர்ப்பூட்டும் சின்னங்கள். பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களே யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளவை.

உடையார்கட்டு தேறாங்கண்டலிலும் வற்றாப்பளையிலும் குமுழமுனையிலும் ஒட்டுசுட்டானிலும் முழங்காவிலும் ஏக்கர் கணக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடப்பட்ட மரங்கள் உள்ளன. பூநகரியில் 500 க்கு மேற்பட்ட வேம்புகள் இன்று பெரும் தோப்பாக வளர்ந்திருக்கின்றன.

நமது சூழலில் ஏராளம் கட்சிகள் உண்டு. ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களெல்லாம் தங்கள் கட்சியின் அடையாளமாகவும் தங்கள் அடையாளமாகவும் நான்கு மரங்களை நட்டாலே ஊரெல்லாம் தோப்புகளாகும் இழந்த மரங்கள் மீள உயிர்ப்புறும்.

சிலைகள், நினைவுச் சின்னங்களுக்குப் பதிலாக மரங்களை நினைவுச் சின்னங்களாக்கலாம். உயிர்ப்புள்ள நினைவுச் சின்னங்களே மண்ணுக்கு அழகு. அதுவே மண்ணுக்கும் மக்களுக்கும் வளமாகும்.