வவுனியாவில் கொரோனா தொற்றையடுத்து அரச அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்!!

934

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று (27.04.2020) இடம்பெற்றது.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சுகாதார துறையினர், பாதுகாப்புத் துறையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெலிமடை இராணுவ முகாமில் இருந்து வவுனியா, மகாகச்சகொடி பகுதிக்கு விடுமுறையில் வந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,

குறித்த கடற்படை வீரரரின் வீடு அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் வவுனியாவில் நடமாடிய இடங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கும் அரசாங்கத்திடம் இக் கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட அரச அதிபரால் ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றை கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாதுகாப்பு தரப்பினர், பொலிசார் மற்றும் சுகாதார துறையினருக்கு அரச அதிபரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.