வவுனியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்!!

925

மாபெரும் ஊர்வலம்..

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இந்து அமைப்புக்களின் சார்பாக சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள் மற்றும் தமிழருவி சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய காலத்தில் வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஒழுங்குப்படுத்தி, வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பேரணியை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக எமது கலை, கலாச்சாரங்களை மற்றவர்களிற்கும் தெரியப்படுத்தும் வகையில் மட்டுமல்லாது எமது சிறார்களிற்கும் வருங்கால நாட்டின் தூண்களிற்கு உணர்த்தும் வகையிலே அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப்பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் எங்களுடைய இந்து மதம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கோரிக்கைகளாக வரிசைப்படுத்தியுள்ளோம்.

எமது கோரிக்கைகளாக பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மத மாற்றத்தை தடுத்தல், அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல்,

இந்து மதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் ஆவன செய்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள்,

நிகழ்வுகளை தடை செய்து அறநெறியை வளர்த்தல், வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள் மாற்றப்படுகின்றமை போன்ற கோரிக்கைகளாகும்.

இந்த ஊர்வலத்திற்கு அனைவரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தோடு குறித்த ஊர்வலம் ஒரு தனிநபர் சார்ந்ததல்ல ஊர்வலத்தில் இந்து மதம் சார்ந்த அனைவரும் பங்கெடுத்து இக்கோரிக்கைகளை உரியவர்களிற்கு உணர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இப்பேரணியானது காலை 08.00 மணியளவில் வவுனியா, குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று, அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று, அங்கிருந்து ஏ9 விதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை அடைந்து அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே ஊர்வலம் நிறைவடையவுள்ளது.