வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சிறப்பு கூட்டம் நேற்று காலை இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பிரஜைகள் குழுவின்; உப தலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தின் பிரதேச இணைப்பாளர்கள், சமுக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது, ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசம் சார்ந்து, மக்கள் சார்ந்து பிரச்சனைகள் கேட்டறியப்பட்டு, கருத்தொருமைப்பாட்டுடன் மாவட்ட மக்களின் நலன்சார்ந்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் பிரதேச ரீதியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்;பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் முதன்மைத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதோடு, இனங்களுக்கிடையில் முரண்நிலையை ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற முறையில் வழங்கப்படும் காணி முறையை நிறுத்தக்கோருதல், அரச திணைக்களங்களில் சேவை காலத்தை கவனத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் முறையற்ற நியமனங்கள், ஆளணி உள்ளீர்ப்புகள், பணி இடமாற்றங்களை நிறுத்தக்கோருதல், இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த சண் மாஸ்டர், தனது உரையில்,
யுத்தத்திற்குப்பின்னர் இலங்கை தீவில் சிறுபான்மையின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இன்று வட கிழக்கு பிரதேசங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட நில அபகரிப்புகளும், இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் காணி ஒதுக்கீடுகளும், தமிழ் பேசும் மக்களை விரக்தியின் உச்ச நிலைக்கே கொண்டு சென்றுள்ளது.
நிகழ்காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணுக்கும் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட விலைகள் அதிகம். காலை நீட்டி அசந்து தூங்கி கொண்டிருக்க தலைப்பக்கத்தால் நிலம் அசூர வேகத்தில் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்தை உணருங்கள்.
இன்றைய சூழலில் காணியை கையகப்படுத்தும் கொள்கையும், 13வது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் கொள்கையும், கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தை பெறுவதால், கால ஓட்டத்தில் காணியே இல்லாத உங்களுக்கெல்லாம் காணி அதிகாரம் எதற்கு? என்றுச்சிங்கள பேரினவாத சக்திகள் கேள்வி எழுப்பினாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமேயில்லை.
தற்போது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் கலாசார சீரழிவுகளும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் தலைதூக்கியுள்ளன. அண்மையில் நெடுங்கேணியில் 7வயது சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். மக்களின் பலவீனங்களைக்குறிவைத்து விசமிகள் அவர்களை தவறான வழிகளுக்கு இழுத்துச்சென்று இளம் சமுகத்தையே சீரழித்து வருகின்றார்கள்.
இது போரினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக நிற்கும் இந்த சமுகத்தின் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டு வரும் ஒரு செயல்பாடாகும். இதற்கு இங்குள்ள தீய சக்திகளும் துணை போகின்றமை வருத்தமளிக்கிறது.
ஒரு சமுகத்தின் இருப்பை சிதைப்பதை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அனைத்து அநீதிகளையும் எதிர்க்கக்கூடிய மக்கள் ஒழுங்கமைப்புகளை பலப்படுத்த ஒவ்வொரு பிரஜையும் முன்வரவேண்டும். இழப்புகளிலிருந்து மீண்டெழுந்து சவால்களை சாதகமாக மாற்றி, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக பிரஜைகள் குழுக்களை பலப்படுத்த வேண்டும். பிரஜைகள் குழுவென்பது அரசியலுக்கு அப்பால்பட்ட ஒரு சமுகக்கூறாகும்.
பிரஜைகள் குழுவானது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை மட்டும் இலக்கு வைக்காமல் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பல்வேறுபட்ட துறைசார்ந்த மக்கள் பிரதிநிதிகளை உள்வாங்கி பிரஜைகள் குழுவை பலப்படுத்த வேண்டும். சமகாலத்தில் வவுனியா மாவட்டம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை பிரஜைகள் குழு ஆராய வேண்டும்.
இன நல்லிணக்கத்துக்காக அர்ப்பணிப்போடு பணி செய்வதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளோடும் கருத்துப்பரிமாற்றங்களை பேண வேண்டும்.
ஜனநாயக பண்புகளை பிரதிபலிக்கும் தேசம் ஒன்றில் மக்கள் ஒன்றுகூடி தமது கருத்தை கலந்தாலோசிக்கவும், வெளிப்படுத்தவும் உரிமையுண்டு. மனித உரிமைகள் பற்றி வலியுறுத்தும் சட்ட பிரகடனங்களும் இவற்றையே வலியுறுத்துகின்றன. பிரஜைகள் குழுக்கள் இயங்க ஆரம்பித்த காலம் முதல் அதனை கருவிலேயே கழுவறுக்கும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், அநாமதேய தொலைபேசி அழைப்பு மிரட்டல்கள், அமர்வுகளுக்கு செல்லவிடாது தடுக்கும் மிதவாத போக்குகள் கண்டிக்கத்தக்கவை. இது நல்லாட்சிக்குரிய நாடாகவிருந்தால், மனித உரிமைகளை முன்னிறுத்தி பலம்பெற்றுவரும் சிவில் சமுக கட்டமைப்புகளை கண்டு அச்சம் கொள்ளத்தேவையில்லை.
வட பகுதிக்கு பயணிக்கும் போதெல்லாம் இழந்த உயிர்களைத்தவிர தமிழர்களுக்கு எல்லாமே தருவேன் என தேவவாக்கு சொல்லும் இந்த நாட்டின் ஜனாதிபதி, இறந்த நம் உறவுகளின் அபிலாசைகளையும், எஞ்சியுள்ள மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.