வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் திறந்திருந்த 10 வர்த்தக நிலையங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்ற 25 பேருக்கு எதிராக நடவடிக்கை!!

3188

வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நேரத்தில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்த 10 வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்ற 25 பேருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளதுடன், இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பொலிசாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் ஆகியோர் இணைந்து வவுனியா, மரக்காரம்பளை – கல்மடு வீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் பூட்டப்பட்டதுடன்,

அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது. அவர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

அத்துடன், மரக்காரம்பளை – கல்மடு வீதியில் அத்தியாவசிய தேவையின்றி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது சென்று வந்த 25 பேர் சுகாதாரப் பிரிவினரால் இனங்காணப்பட்டது.

அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தின் தற்போதைய அபாய நிலமையை கருத்தில் கொண்டு கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த பொதுமக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.