வவுனியாவில் 80 வீதத்திற்கு அதிகமான அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாடசாலைகள் ஆரம்பம்!!

1744

பாடசாலைகள் ஆரம்பம்..

21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று ( 19.10.2021) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போதே வவுனியா மாவட்டத்தில் 80 வீதத்திற்கு அதிகமான அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நடைமுறையிலுள்ள கோவிட் சூழ்நிலையில் பாடசாலைகளைச் சுகாதார வழிமுறைகளுக்கமைவாக ஆரம்பிப்பதற்கேற்ற பிரத்தியேகமான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன்,

நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளைப் பாதுகாப்பான முறையில் ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிப்பது தொடர்பாகவும்,

வெளி மாவட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்கள் கடமைக்கு திரும்புவது மற்றும் அவர்களுக்குரிய போக்குவரத்து வசதி தங்குமிடம் என்பன தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,

மேலும் தற்போது வவுனியா மாவட்டத்தில் நிலவும் கோவிட் நிலமைகள் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாகவும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் , சுகாதார பிரிவினர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.