சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த பெண் கலந்து கொண்டார். அவரை ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான கிராமிய பொது அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உள்பட 35க்கும் மேற்பட்ட விதவைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை பணியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பெண்களுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார்.
இவருடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்ற எஸ்தர் தேவகுமார் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இது பற்றி் தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி என்பதால் அவர்கள் சென்றுவிட்டனர்.
இருப்பினும், நிகழ்ச்சி முடிந்து எஸ்தர் தேவகுமார் கொழும்புக்குத் திரும்பும்போது ஓமந்தை சோதனைச்சாவடியில் அவரை ராணுவத்தினர் பிடித்து நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனப் பெண்களையும் தடுத்து நிறுத்தி சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்த ராணுவ அதிகாரிகளிடம், சர்வதேச விதவைகள் தினத்தையொட்டி, அரசு சார்பில் நடத்தப்பட்ட விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அந்த பெண்கள் எடுத்துக் கூறினர்.
எனினும் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவு படியே விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து அவர்கள் சென்றுவிட வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுற்றுலா பயணியாக இலங்கை சென்ற எஸ்தர் தேவகுமார் கடந்த 24ஆம் தேதி சென்னை திரும்பினார்.
-விகடன்-