கடற்கரையில் தொலைந்த மனைவி : ஒரு கோடி செலவில் தேடுதல் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

1799

இந்தியாவின்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் புகார் அளித்த நிலையில், ஹெலிகாப்டரில் தேடுதலுக்கு பின் வேறொரு நபருடன் மனைவி சென்றது தெரிய வந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ரவி என்ற நபர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது திருமண நாளை கொண்டாட மனைவி சாய்பிரியாவுடன்(22) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கணவன் – மனைவி இருவரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் கரைக்கு திரும்பிய சாய்பிரியா கணவரிடம் பசிக்கிறது என்று கூறியுள்ளார். ரவியும் அவருக்கு சாப்பிட உணவு வாங்க சென்று திரும்பியுள்ளார். ஆனால், சாய்பிரியாவை அங்கு காணவில்லை.

இதனால் பதறிப் போன ரவி கடற்கரை முழுவதும் தேடியுள்ளார். எங்கும் தேடியும் மனைவி கிடைக்காததால் பொலிசாரின் உதவியை நாடிய ரவி, தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து தேடியுள்ளார். படகுகளைக் கொண்டு தேடிய முயற்சி பலனளிக்காததால், ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடலிலும், கடற்கரையிலும் இரவு முழுவதும் ஹெலிகாப்டரில் தேடுதல் பணி நடந்துள்ளது. ஆனால் இறுதிவரை சாய்பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாய்பிரியாவின் பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் குரல்பதிவு தகவல் வந்துள்ளது.

அதில், நெல்லூரை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், ரவியுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் சாய்பிரியா பேசியிருக்கிறார். மேலும் காதலருடன் பெங்களூருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட சாய்பிரியாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரவி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதன் பின்னரும் பேரதிர்ச்சி செய்தி ஒன்று அவர்களுக்கு வந்தது. சாய்பிரியாவை தேட கடலுக்குள் படகுகள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதால் ஒரு கோடி வரை செலவானதாகவும், பொய் புகார் அளித்ததற்கும் சேர்ந்து நஷ்டஈடாக அந்த தொகையை தரவேண்டும் என்றும் அதிகாரிகள் பெண்ணின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளானர்.

மருமகன் தான் புகார் அளித்தார் என்றும், மகள் வேறொருவருடன் சென்றது தங்களுக்கு தெரியாது என்றும் சாய்பிரியாவின் பெற்றோர் வாதிடவே இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது. இச்சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.