யோகா பயிற்சி பெற்று திரும்பிய போது மாயமான பெண் சடலமாக மீட்பு : வெளியான CCTV காணொளி!!

456

திருப்பூரில்..

புகழ்பெற்ற ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று திரும்பிய போது மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பழனிக்குமார்-சுபஸ்ரீ இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் குழந்தை உள்ளது.

சுபஸ்ரீக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலென்ஸ் என்ற யோகா பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த அவர், 7 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் 18 ஆம் திகதி அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் பழனிகுமார் வந்தபோது சுபஸ்ரீ காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் காலை 9 மணிக்கே மையத்தை விட்டு வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில் செம்மேடு அருகே சுபஸ்ரீ ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை பொலிசார் வழக்குப் பதிவு செய்து சுபஸ்ரீயை தேடி வந்தனர்.

இந்நிலையில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பொலிசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான சுபஸ்ரீயின் சடலம் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சுபஸ்ரீ உயிரிழந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், நுரையீரல் நீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடலில் எந்த வித காயங்களும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சுபஸ்ரீ மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலைய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.