ஊசலாடும் கர்ப்பிணிப் பெண்ணின் உயிர்… இறந்தே பிறந்த குழந்தை : நடந்த விபரீதம்!!

314


திருச்சியில்..



தனியார் மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தாலும், கால தாமதமாக வந்து சேர்ந்ததாலும் கர்ப்பிணியின் உயிர் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கதம்பூரை சேர்ந்தவர் சுபா (25). இவருக்கும் துறையூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தை சேர்ந்த கர்ணன் வாலிபருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.




தற்போது சுபா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் சுபாவிற்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து அவரை துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள நிர்மல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சுபாவிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மருத்துவர்கள் காலதாமதமாக வந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சுபாவின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததாக தெரிகிறது. சுபாவின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சுபா அனுப்பி வைக்கப்பட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் அலட்சியத்தினால் தான் குழந்தை இறந்தது என்று புகார் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும்,

சுபாவின் உயிருக்கு துறையூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் உத்திரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் குழந்தை இறந்து பிறந்ததும்,

கர்ப்பிணியாக இருந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.