2 பிள்ளைகள் இருந்தும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லை… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

3973

நாமக்கல்லில்..

இன்றைய வாழ்வியலில் தனிக்குடித்தனங்கள் அதிகரித்து விட்டதால் பெற்றோர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். நாம் வந்த வேலை முடிந்து விட்டது.

பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து சம்பாதிக்க வேலை தேடிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்த பிறகு பெற்றோர்களை மறந்தே விடுகிறோம். இதனால் வயதானவர்கள் கவனிக்க ஆளின்றி பலர் முதியோர் இல்லங்களில் தாமாகவே சேர்ந்து கொள்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் வசித்து வரும் தம்பதிகள் முருகேசன், பாப்பா . இதில் முருகேசனுக்கு 65ம், பாப்பாவுக்கு 60 வயதும் ஆகிறது. இவர்களுக்கு லதா, சுமதி என்ற 2 மகள்கள் .

இருவருக்கும் திருமணமாகி விட்டதால் முருகேசன் – பாப்பா தனியே வசித்து வந்தனர். முருகேசன், அப்பள நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். வயதானதால் வேலை பார்க்க முடியவில்லை. வருமானம் மிகவும் குறைந்ததால் குடும்பத்தை நடத்த தம்பதியினர் சிரமப்பட்டனர்.

அத்துடன் மகள்கள் வீட்டிற்கும் செல்ல முடியாது. அவர்களிடமும் பணம் எதுவும் கேட்க முடியாது என்ற மன விரக்தியும் சேர்ந்து கொண்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முருகேசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதனையடுத்து நேற்று முன் தினம் டிசம்பர் 4ம் தேதி புதன்கிழமை இரவு இருவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயதானவர்கள் கவனிக்க ஆளில்லாததால் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.