ஆம்புலன்சுக்கு கொடுக்க பணம் இல்லை.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்!!

313

மேற்கு வங்காளத்தில்..

மேற்கு வங்காள மாநிலம், கிராந்தி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் பிரசாத் தெவன். இவருடைய தாயாருக்கு சுவாசப் பிரச்சனை இருந்ததால் சிகிச்சைக்காக 40 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ந்தார். அங்கிருந்து தாயாரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ3000 கேட்கப்பட்டது. அவரிடம் அத்தனை பணம் இல்லாததால் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் சுமந்து கொண்டு நடக்க தொடங்கினார்.

உடலின் மற்றொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்து வந்தார். இக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனை நேரில் கண்ட சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்துதந்தது.

இது குறித்து ராம் பிரசாத் தெவனிடம் கேட்ட போது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ900 வசூலிக்கப்பட்டது. அதே ஆம்புலன்சில் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3000 பணம் கேட்டனர். எங்களிடம் அத்தனை பணம் கிடையாது.

எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி நானும், எனது தந்தையும் தோளில் சுமந்து வந்தோம். குறிப்பிட்ட மருத்துவமனையில் சூப்பிரண்டு கல்யாண் கானிடம் கேட்ட போது ” மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல் நடந்துள்ளது.

மருத்துவமனை வளாகத்திலேயே இது குறித்து கேட்டிருந்தால் எங்களால் பிண ஊர்தி ஏற்பாடு செய்து தந்திருக்க முடியும். பாவம், அவர்களுக்கு இதுகுறித்து தெரியாமல் போய் விட்டது. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி “இது போன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களை மருத்துவமனை அருகே கூட தனியார் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் அனுமதிப்பது இல்லை” என வேதனையுடன் கூறியுள்ளார்.