சென்னையில்..
அப்போதெல்லாம் ஒரே தாய் 5 அல்லது 6 பிள்ளைகளை அசால்ட்டாக வளர்த்தாள். ஆனால் இன்றைய பிள்ளைகளை வளர்க்க அம்மா, அம்மம்மா, அவருடைய அக்கா, பெரியம்மா என 4 அல்லது 5 பேர் தேவைப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பெரிய சவால் தான். எப்படி தான் கண்ணும், கருத்துமாக பார்த்தாலும் அசந்த நேரத்தில் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி விடுகின்றனர். சில நேரங்களில் அலட்சியம் ஆபத்திலும் முடிந்து விடுகிறது.
சென்னை விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலணியில் வசித்து வருபவர் அருண்குமார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும், அடுத்ததாக ஒரு வயதில் இளமாறன் என்ற மற்றொரு குழந்தையும் இருந்தது. அருண்குமார், விபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர்.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் விடுமுறை நாள். இதனால் அன்றைய தினம் வீட்டில் அனைவரும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேவகி சமையல் அறையில் இருந்தார். ஒரு வயது இளமாறன் வீட்டின் கழிவறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் விளையாடிக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சமையல் அறையில் இருந்த தேவகி சத்தம் கேட்காததால் இளமாறனை தேடியபோது தண்ணீர் வாளிக்குள் நீரில் மூழ்கியபடி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு பதறி துடித்து உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தை தண்ணீரில் மூழ்கியதால் மூச்சு திணறி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அடுத்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாடிய 2 நாளிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.