மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூரம்!!

890

ராஜபாளையத்தில்..

ராஜபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவி கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கொலையாளியான கணவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

குடும்பத் தகராறில் மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசுகையில், “ராஜபாளையம் அருகே மேல ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 34), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி.

இவரின் இரண்டாவது மனைவி பாண்டிச்செல்வி(23). இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கணவன் – மனைவிக்கிடையே நடத்தையில் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்தத் தகராறு காரணமாக பாண்டிச்செல்வி, ஒத்தப்பட்டியிலுள்ள அவரின் பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதையறிந்து, அங்கு சென்ற மதிமன்னன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், கீழே கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி பாண்டிச்செல்வியை, மதிமன்னன் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் பாண்டிச்செல்வி கீழே விழுந்திருக்கிறார். தொடர்ந்து இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு போலீஸார், பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டிச்செல்வி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரின் உடல், கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், காவல் நிலையத்தில் சரணடைந்த மதிமன்னனைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மதிமன்னனை இரவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற மதிமன்னன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையைச் சுற்றியிருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி‌ கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்ததில், மதிமன்னன் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. இதைக்கொண்டு அவரைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.