காதலியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய இளைஞன்!!

447

நீலகிரியில்..

நீலகிரியில் காதலித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடததி வருகின்றனர்.

உதகை அருகே உள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர்கள் ராமநாதன், கல்யாணி தம்பதியினர். இவர்களின் இரண்டு மகள்களுள் ஒருவர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான விசித்ரா பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

அவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி, அவரது வீட்டின் பின் புறம் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கபட்டார். அது குறித்த தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்து யாராவது உடலை தொட்டியில் வீசினார்காளா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் விசித்திராவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தண்ணீர் தொட்டியில் வீசியது தெரிய வந்ததுள்ளது.

அதனைத் தொடர்ந்து மஞ்சூர் காவல்துறையினர் அவரை கைது, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின் கொலை செய்த ஜெயசீலனை சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜெயசீலன் கூலி வேலை செய்து வருவதும், இருவருக்கும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்த போது அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளதும், நண்பர்களாக பழகிய இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

அதனை தொடர்ந்து ஜெயசீலனின் நடவடிக்கைகள் விசித்ராவுக்கு பிடிக்காததால் ஜெயசீலனுடன் பழகுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து விசித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.03) நடைபெற்றுள்ளது.

இது குறித்து தகவல் ஜெயசீலன் தெரியவந்ததை அடுத்து, செல்போன் மூலம் விசித்ராவை தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் விசித்ரா அவருடைய அழைப்பை எடுக்காததால் நேரில் சென்ற ஜெயசீலன், விசித்ராவிடம் தனியாக பேச பாதகண்டிக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் கொள்ள மறுக்கும் காரணம் குறித்து கேட்டதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயசீலன் அருகில் இருந்த கயிறை எடுத்து விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விசித்திராவின் உடலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.