ஆத்தூரில்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூவர் தெருவில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இளம்பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்த பெண் பாரதியார் தெருவில் வசித்து வரும் டைலர் முருகனின் மனைவி சாந்தி [45] என்பதும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சாந்திக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு கணவன் மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் முருகனிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி தகராறில் மனைவி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.