“30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்” : தற்கொலை செய்துகொண்டவரின் அதிரவைக்கும் கடிதம்!!

10221

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் தீன்தயாள் நகரைச் சேர்ந்தவர் ஆதித்ய ஷர்மா(30). ஹோட்டல் நடத்திவந்த இவர் திடீரென நேற்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், அவரது அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த தற்கொலை குறிப்புகளையும் கைப்பற்றியிருக்கிறது.

அதில், “தற்போது எனக்கு 30 வயது 8 மாதம் ஆகிறது. 8 வருடங்களுக்கு முன்பே 30 வயதுவரை மட்டுமே வாழ வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன். எனது தற்கொலை தாமதமானதற்கு என்னுடைய அம்மாதான் காரணம். எனக்குப் பிறகு அவர்களை யார் பார்த்துக்கொள்வார் என்ற பரிதவிப்பு இருந்தது.

இப்போது என்னுடைய தாயைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என் நண்பர்களிடம் விட்டுச் செல்கிறேன். எனது தற்கொலைக்கு என் நண்பர்கள், உறவினர்கள் என யாரும் காரணமல்ல.

எனக்குக் கடன் உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் கிடையாது. நன்றாகவே வாழ்ந்தேன். அம்மாவுக்கும், எனது நண்பர்களுக்கும் முன்னால் இறந்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

அவர்களின் மரணத்தைப் பார்க்கும் சக்தி எனக்குக் கிடையாது. ‘அம்மா என் மரணத்துக்காக என் நண்பர்களைத் திட்டாதீர்கள். அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’. நான் சித்து மூஸ்வாலாவின் தீவிர ரசிகன்.

நான் தற்கொலை செய்துகொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி 2016-ம் ஆண்டு ஒருவரிடம் எனது தற்காப்புக்காக வாங்கியது. இப்போது அவரும் என்னைப்போல உயிரோடு இல்லை. இதுவரை இந்த துப்பாக்கியைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை.

எனது இறுதிச்சடங்கை என்னுடைய நண்பர்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதை காவல்துறை அதிகாரிகளிடம் சிறப்புக் கோரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தற்கொலை குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “தற்கொலை குறிப்பைப் பார்க்கும்போது அவருக்கு மனநலப் பிரச்னை இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அவரின் மரணம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.